சிசுவை வாயில் கவ்விச் சென்ற தெருநாய்... மருத்துவமனையில் அதிர்ச்சி வீடியோ!

 
நாய்

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், தெருநாய் ஒன்று மனித சிசுவை வாயில் கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த அக்டோபர் 27-ம் தேதி, மெதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாய் ஒன்று சிசுவை வாயில் கவ்விக்கொண்டு சென்றதைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்துப் பகிர்ந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டன.

விசாரணையில், அருகிலுள்ள உத்தம் தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதும், சுமார் 8 மாத சிசு மருத்துவமனை வளாகத்தில் வீசப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதையடுத்து உத்தம் மருத்துவமனை மற்றும் நிபுண் அல்ட்ராசவுண்ட் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசுவை அங்கு கொண்டு வந்து வீசியது யார், மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணை முடிவிலேயே முழு விவரங்கள் தெரியவரும்.