ஜார்கண்டில் 21-வது நாளாகத் தொடரும் மாணவர்கள் போராட்டம் - தேசியக் கொடியுடன் பிரமாண்ட பேரணி!

 
ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம்

ஜார்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராகவும், தேர்வுகளை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் தலைநகர் ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 21-வது நாளாகத் தீவிரமடைந்துள்ளது.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் மாணவர்கள் அனைவரும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி ராஞ்சி வீதிகளில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தேர்வாணையத்தின் முறைகேடுகளைக் கண்டித்தும், வெளிப்படையான விசாரணை நடத்தக் கோரியும் இந்தத் தேசியக் கொடி ஊர்வலம் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த 13 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜார்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திக்காரி மோர்ச்சா தலைவர் தேவேந்திரநாத் மகதோ மற்றும் 4 மாணவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது.

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களை மீட்டு ராஞ்சியில் உள்ள அரசு ராஜேந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அம்மாநில அரசு உடனடியாகத் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனப் பல்வேறு மாணவர் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.