3,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் கயிற்றில் சிக்கிய பயணி... பகீர் வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள தோரன்மால் மலைப்பிரதேசத்தின் 'சீதாகாய் பாயின்ட்' பகுதியில் புதிய சாகச விளையாட்டு தளம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கயிற்றுப் பாதையில் சாகசப் பிரியர்களான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகப் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணி ஒருவர் 3,500 அடி ஆழமுள்ள பயங்கரமான பள்ளத்தாக்கின் மேலே கயிற்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பயணி மேற்கொண்டு நகர முடியாமல் ஆழமான பள்ளத்தாக்கின் மேல் நடுவானில் சிக்கிக் கொண்டார்.
கீழே பார்த்தால் அஞ்சத்தக்க ஆழம் கொண்ட பள்ளத்தாக்கு என்பதால் அந்தரத்தில் தொங்கியபடி தவித்த சுற்றுலாப் பயணி நிலைமையைக் கண்டு அச்சமடைந்தார். இந்த ஆபத்தான சூழலைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினர். ஊழியர் ஒருவர் தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அதே கயிற்றின் வழியே சறுக்கிக் கொண்டு அந்தரத்தில் தவித்த பயணியை நோக்கி விரைந்து சென்றார். பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் அந்தப் பயணியை அடைந்த ஊழியர், அவரைப் பாதுகாப்பாக மீட்டுத் தரைக்குக் கொண்டு வந்தார்.
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டுச் சுற்றுலாப் பயணியைப் பாதுகாப்பாக மீட்ட ஊழியர்களின் செயலுக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரபரப்பான மீட்புப் பணியின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி இணையவாசிகளிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. சாகச விளையாட்டு தளங்களில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளையும் அவசரகால ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
