52000/- கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒப்புதல்... உலகம் முழுவதும் புற்றுநோய் வழக்குகளை முடிக்க திடீர் முடிவு!

 
ஜான்சன்

பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த டால்கம் பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான நுகர்வோர்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான வேதிப்பொருட்கள் இருந்ததாகப் புகார்கள் சுமத்தப்பட்டன. இந்தத் தொடர் வழக்குகளால் நிறுவனத்தின் சர்வதேசப் பெயருக்கும் வர்த்தகத்திற்கும் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது.

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த சட்டப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு இழப்பீடு வழங்கி வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளப் பல பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி இந்த அனைத்து வழக்குகளையும் ஒரே கட்டமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுமார் 5.5 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000 கோடி, நஷ்டஈடு வழங்க நிறுவனம் சம்மதித்துள்ளது.நீதிமன்ற வழக்குகளைத் தவிர்த்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் புதிய சமரசத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜான்சன்

பெரும்பான்மையான பாதிக்கப்பட்ட நுகர்வோரின் ஒப்புதலைப் பெற்று இந்த சட்டப் பிரச்சினையைச் சீரமைக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது டால்கம் பவுடர் தயாரிப்பு மற்றும் விற்பனையை உலக அளவில் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாகச் சோள மாவு அடிப்படையிலான புதிய பவுடர்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் தங்களது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றே நிறுவனம் நீதிமன்றங்களில் தொடர்ந்து வாதிட்டு வருகிறது.