“ஜோசப் விஜய் எனும் நான்..” நாளை முதல்-அமைச்சராகப் பதவியேற்பு? - இன்று ஆளுநருடன் சந்திப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (மே 6) ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். முன்னதாக, நேற்று பனையூரில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக-விற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் திரட்ட தவெக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் மதசார்பற்ற உணர்வுகளைக் கருத்தில் கொண்டு விஜய்யின் கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுக்க மாநில காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் தவெக-விற்கான ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், தவெக எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.

ஆளுநரை இன்று சந்திக்கும் விஜய், தனது கட்சி மற்றும் ஆதரவு அளிக்கும் கட்சிகளின் கடிதங்களை ஒப்படைப்பார். இதனைத் தொடர்ந்து, நாளை (மே 7) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழா நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. "சி.ஜோசப் விஜய் எனும் நான்..." என்று கூறி விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்பார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா முன்னேற்பாடுகளைத் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
