நடிகை த்ரிஷா குறித்து ஆபாசப் பதிவுகள் - ஜோதிமணி கடும் கண்டனம்!

 
த்ரிஷா ஜோதிமணி

சமூக வலைதளங்களில் நடிகை த்ரிஷாவை இலக்காக வைத்து வெளியிடப்படும் ஆபாசப் பதிவுகளுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்பி ஜோதிமணி, அரசியலுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத நடிகை த்ரிஷா போன்ற பிரபலங்கள், சிலரின் குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும் வஞ்சகமான தாக்குதல்களுக்காகவும் தொடர்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷா

மேலும், இதுதொடர்பாக அவர், அரசியலிலும் பொதுவாழ்விலும் இயங்கும் சென்னை மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தாயார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பல முன்னணிப் பெண்களும் இதுபோன்ற அருவருப்பான மற்றும் கீழ்த்தரமான இணையவழித் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டு வருகின்றனர்.

பெண்களை அவமதிக்கும் இத்தகைய விஷமத்தனமான செயல்களைச் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இதற்கு எதிராகச் சமூக வலைதளப் பயனர்களும் பொதுமக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கனிமொழி பிரியா

சமூக வலைதளங்களில் பெண் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெண் குடும்பத்தினரை இலக்காக வைத்துத் தொடரும் இத்தகைய அவதூறுப் பரப்பல்களுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.