14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சித்பராக்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த சிறுவன் இப்பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளான். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பாலியா நீதிமன்றம் இந்தத் தண்டனையை அறிவித்துள்ளது.

இவ்வழக்கு குறித்து மாநில அரசு சிறப்பு வக்கீல் விமல் குமார் ராவ் கூறுகையில், குற்றவாளிக்கு 21 வயது ஆகும் வரை காஜிபூரில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, கல்வி மற்றும் மன, உடல் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சிறுவன் 21 வயதை அடைந்ததும் எஞ்சிய சிறை தண்டனையை அனுபவிக்க மாவட்ட சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
