ராட்சத முதலையை அசால்ட்டாக குழந்தை போல தூக்கிய பெண்! வைரல் வீடியோ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விலங்கு காப்பகத்தில் சுமார் 250 பவுண்டு எடை கொண்ட ராட்சத முதலையை பெண் ஒருவர் மிகவும் சாதாரணமாக தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் ‘தி ரெப்டைல் ஜூ’வில் ‘டார்த்’ என்ற பெயருடைய முதலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த முதலையை பல ஆண்டுகளாக ஜூலியட் ப்ரூவர் என்பவர் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான வீடியோவில், சுமார் 250 பவுண்டு எடை கொண்ட டார்த் முதலையை ஜூலியட் தனது கைகள் மற்றும் தோள்களின் உதவியுடன் தூக்கிச் செல்கிறார். மிகப்பெரிய உருவம் கொண்ட முதலையை அவர் எவ்வித பதற்றமும் இல்லாமல் கையாளும் காட்சி பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறு வயது முதலே டார்த்தை பராமரித்து வந்ததால், ஜூலியட்டுக்கு அந்த முதலையை கையாள்வதில் நீண்டகால அனுபவம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து பராமரித்து வந்ததால், இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக முதலையைப் போன்ற பெரிய ஊர்வன உயிரினங்களை கையாள்வது ஆபத்தானதாக இருக்கக்கூடிய நிலையில், இங்கு பயிற்சி பெற்ற நபர்கள் மற்றும் விலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டே டார்த் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜூலியட் ராட்சத முதலையை குழந்தையைப் போல தூக்கிச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. முதலையின் பிரம்மாண்ட உருவமும், அதை மிகவும் இயல்பாக ஜூலியட் கையாளும் விதமும் வீடியோவை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.விலங்குகளை நெருக்கமாக கையாள்வது தொடர்பான இதுபோன்ற காட்சிகளை பொதுமக்கள் தாங்களாகவே பின்பற்றக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
