குரு பெயர்ச்சி 2026| தமிழக கோவில்களில் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலங்கள்; பரிகார ரகசியங்கள்.. எந்தெந்த ஊரில் இருக்கு?!
தமிழகத்தில் பல கோவில்களில் தட்சிணாமூர்த்தி மாறுபட்ட வித்தியாசமான கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
மாயவரம் வள்ளலார் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் தனித்துவமானவர். இவர் நந்தியின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தக்கோலத்தில் உள்ள உமாபதி கோவிலில், தட்சிணாமூர்த்தி, வழக்கமான நேர் நிலைக்கு மாறாக, ஒரு காலைத் தொங்கவிட்டு மற்றொரு காலை ஆசனத்தின் மீது ஏற்றி வைத்து, மென்மையாகத் தலை சாய்ந்த கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
ஆந்திர மாநிலம் ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளியில் உள்ள வான்மீகேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தி காளையின் அருகிலும், தேவியுடனும் இணைந்து தம்பதி சமேதராகக் காட்சி தருகிறார்.
தீர்த்தனகிரியில் உள்ள சிவக்கொழுந்தேஸ்வரர் கோவிலில் தனது இரண்டு கால்களையும் மடக்கிப் பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். இவரது காலடியில் வழக்கமாக இருக்கும் முயலகனுக்கு பதிலாக 4 சீடர்கள் மட்டுமே உள்ளனர்.
திருவிழி மழலையில் உள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் தேவகோஷ்டத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியின் இடது பாதம், அஞ்ஞானத்தைக் குறிக்கும் முயலகன் மீது இல்லாமல், தூய்மையான தாமரை மலரின் மீது பதிந்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரம்ம தேசம் கைலாசநாதர் கோவிலில் கால் மாறி அமைந்த தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இவர் முயலகன் மீது தனது இடது பாதத்தைப் பதிய வைத்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக இவரது இடக்காலில் காப்பு, சிலம்பு, தண்டை, வீர கழல் போன்ற ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
திருவையாற்றில் உள்ள ஐயாறப்பர் கோவிலில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் நிலைத்தன்மையைக் குறிக்கும் ஆமை உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உலகிலேயே கிழக்கு நோக்கிய திசையில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஒரே தட்சிணாமூர்த்தி திருத்தலமாக விளங்குகிறது.
கோவில்பட்டியில் சங்கரன் கோவில் பாதையில் உள்ள வெட்டுவானம் சிவன் கோவிலில், தட்சிணாமூர்த்தி கைகளில் மிருதங்கம் வாசிக்கும் பரவச நிலையில் செதுக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரம் யாழ்முரிநாதர் கோவிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அந்த தெய்வீக இசையைக் கேட்டுத் தன்னை மறந்த தட்சிணாமூர்த்தி சற்று பின்புறமாகச் சாய்ந்துள்ளார். இதனை விளக்கும் வகையில் இங்குச் சாய்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு, மஞ்சள் ஆடைக்கு மாறாகக் காவி உடை அணிவிக்கப்படுகிறது.
திரிச்சோபுரம் ஸ்ரீ மங்களேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையினைக் கைவிரல்களால் தட்டினால் சப்தஸ்வர ஓசை (ஏழு இசைக் குரல்கள்) கேட்கும் அதிசயம் நிலவுகிறது. இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. மேலும், இடது கையில் நாகமும், வலது கையில் அக்னியும் ஏந்தி மாறி காட்சியளிக்கிறார்.

தஞ்சாவூர் திருவைகாவூர் வில்வனேஸ்வரர் திருக்கோவிலில் மட்டுமே, வேறு எங்கும் காணக் கிடைக்காத நின்ற கோலத்தில், கையில் செங்கோல் ஏந்தியபடி தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.
திருவெற்றியூரில் உ ள்ள தியாகராஜ சுவாமி கோயில் அருகிலுள்ள தனி சன்னதியில், வடக்கு பார்த்த நிலையில் தட்சிணாமூர்த்தி அருளுகிறார். இவரது அருகில் 4 முனிவர்களுக்குப் பதிலாக 18 முனிவர்கள் அமர்ந்துள்ளனர். குரு தோஷ பரிகாரமாக இவரது சன்னதியில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
பாமணி நாகநாத திருக்கோயிலில் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து 'சிம்ம தட்சிணாமூர்த்தியாக' இவர் வீற்றிருக்கிறார்.
காஞ்சிபுரம் கோவிந்தவாடியில் கூர்மம், ஆமை, எட்டு யானைகள், ஐந்து நாகங்கள், சிம்மம், அஷ்டதிக்கு பாலகர்கள் என 'பஞ்ச ஆசனங்களின்' மீது இவர் அமர்ந்துள்ளார். முருகப்பெருமானைப் போல இவருக்குச் சித்திரை திருவிழாவின் போது பக்தர்கள் 'விபூதி காவடி' எடுத்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
கும்பகோணம் அருகே நடார் கிராமத்தில் ஸ்ரீ மணிகண்ட ஈஸ்வரன் கோவிலில், குரு பைரவருடன் இணைந்து, பன்னிரண்டு ராசிகளின் உருவங்களின் மீது தட்சிணாமூர்த்தி அமர்ந்த கோலத்தில் குரு தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குகிறார்.
