JUST IN: சிறுமிகள் பாலியல் வழக்கில் ஜெம் வீரமணியின் மேலாளர் கைது!
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரப கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணிக்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரது மேலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த பென்டிரைவ் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரசிம்ஹன் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

மேலும், இது தொடர்பான மற்றொரு வீடியோவை வைத்திருந்தும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காத கணேசன் என்பவர் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்யப்பட்டுப் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட புலன் விசாரணையில், ஜெம் வீரமணியின் பாலியல் வன்கொடுமைக்குச் சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் லாசர் பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோரும் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே ஜெம் வீரமணி மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புதிய புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், வீரமணியின் லாயட்ஸ் சாலை வீடு, கானத்தூர் பண்ணை வீடு மற்றும் சாமுண்டீஸ்வரி நேச்சுரல் ஸ்டோன்ஸ் நிறுவனங்களில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, ஜெம் வீரமணி இழைத்த குற்றங்களுக்கு உடந்தையாகவும் உதவியாகவும் செயல்பட்ட அவரது மேலாளர் சக்திவேல் என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
