JUST IN: இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஈரான் சம்மதம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் இனி சிக்கல் இல்லை?
சர்வதேச அளவில் இஸ்ரேல் - ஈரான் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவிற்கு ஒரு நிம்மதி தரும் செய்தியை இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி வெளியிட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாட்டினால் தவித்து வரும் இந்தியாவிற்கு 'பாதுகாப்பான வழித்தடம்' வழங்குவது குறித்து அவர் அளித்துள்ள உறுதிமொழி, உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் இந்திய எரிபொருள் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, "இந்தியா எங்களது நண்பன் என்பதால், பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்படும்" என அதிரடியாக அறிவித்துள்ளார்.
#WATCH | Delhi: On giving safe passage to India, Iran's Ambassador to India, Mohammad Fathali, says, "... Yes, because India is our friend. You will see it within two or three hours. We believe that Iran and India share common interests in the region..." pic.twitter.com/twTsE1Bjhv
— ANI (@ANI) March 13, 2026
செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஃபதாலி, "ஆம், இந்தியா எங்களது நண்பன். அடுத்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் இதற்கான மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். ஈரானும் இந்தியாவும் இப்பிராந்தியத்தில் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம்," எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஈரானியக் கடற்படை அல்லது வான்வெளிப் பகுதியில் இந்தியக் கப்பல்கள் எவ்விதத் தடையுமின்றிப் பயணிக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் 57 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. ஈரானின் இந்த அறிவிப்பு, இந்தியாவில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கப் பெரும் உதவியாக இருக்கும். போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் வேளையில், ஈரானின் இந்த ஒத்துழைப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒரு பக்கமும், ஈரான் மறுபக்கமும் மோதி வரும் வேளையில், இரண்டு தரப்புடனும் சுமுகமான உறவைப் பேணும் இந்தியாவின் 'நடுநிலை வெளியுறவுக் கொள்கை'க்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்து ஈரானுக்கு எதிரான அழுத்தம் இருந்தாலும், இந்தியாவின் எரிசக்தி தேவையைக் கருதி ஈரான் இந்தச் சலுகையை வழங்கியுள்ளது.
