JUST IN: எம்.எல்.ஏ. அருள்விக்னேஷுக்குப் போலீசார் நேரில் சம்மன் - பலத்தை இழக்கிறதா தவெக அரசு?!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பித் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் புகாரில், 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி (தனி) த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷுக்கு இன்று (நவம்பர் 25, புதன்கிழமை) போலீசார் நேரில் சென்று சம்மன் வழங்கியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகக் கோரி இந்தச் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எல்.ஏ. அருள்விக்னேஷிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்றிரவு (நவம்பர் 24) காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அப்போது எம்.எல்.ஏ. வீட்டில் இல்லாததால் சம்மன் வழங்க முடியாமல் உடனடியாகத் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று நவம்பர் 25 காலை மீண்டும் எம்.எல்.ஏ. அருள்விக்னேஷின் வீட்டிற்குச் சென்ற காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, விசாரணைக்கு ஆஜராகக் கோரும் சம்மனை அவரிடம் நேரில் வழங்கினார்.
எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீதான வழக்கை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையைக் காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. காமினி கண்காணிக்க உள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கனவே வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், சம்மன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அருள்விக்னேஷிடம் நடைபெறவுள்ள விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
