JUST IN: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணைத் தாக்குதல் - ஈரான் அறிவிப்பு - நெதன்யாகு நிலை என்ன?!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேலின் முக்கிய இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேல் விமானப்படைத் தளபதியின் இருப்பிடம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் 'கெய்பர் ஷேகான்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் மிகவும் துல்லியமாக நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் பிரதமர் நெதன்யாகு தனது அலுவலகத்தில் இருந்தாரா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
நெதன்யாகுவின் தற்போதைய நிலை என்ன, அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பது குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இஸ்ரேல் தரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி, அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பதிலடி: பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

ஈரான் உடனடியாக ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் "மோசமான பேரழிவைச் சந்திக்கும்" என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் போர் முழு வீச்சில் தொடங்கியுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
