ஒரே ஒரு இமெயில் போதும்.. உங்க பிரச்சனைக்கு உடனே தீர்வு - தமிழக அரசு வெளியிட்டுள்ள இமெயில் ஐடிகளின் முழு தொகுப்பு! உடனே சேவ் பண்ணிக்கோங்க!
பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்குத் தீர்வு காணும் வகையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிகளை வெளியிட்டுள்ளது. இனி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரியாமல், ஒரே ஒரு இமெயில் மூலமாகவே தங்களின் குறைகளை மக்கள் நேரடியாகக் கோட்டைக்கு அனுப்ப முடியும்.
பொதுமக்கள் தங்களின் எந்தவொரு புகாரையும் ஒரே இடத்தில் தெரிவிப்பதற்காக 'முதலமைச்சர் உதவி மையம்' செயல்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் cmhelpline@tn.gov.in என்ற இமெயில் முகவரி மூலமாகவோ அல்லது http://cmhelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவோ தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம். மேலும், இணைய வசதி இல்லாதவர்கள் 1100 என்ற இலவசத் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டும் தங்களது குறைகளைக் கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காகத் துறை வாரியாகப் பிரத்யேக இமெயில் முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குப் புகார் அனுப்ப cs@tn.gov.in என்ற முகவரியையும், போலீஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான புகார்களுக்கு homesec@tn.gov.in என்ற முகவரியையும் பயன்படுத்தலாம்.

அத்தியாவசியத் தேவைகள் (மின்சாரம், குடிநீர், ரேஷன்):
மின்சாரம் மற்றும் ஈபி சார்ந்த பிரச்சனைகளுக்கு enersec@tn.gov.in என்ற முகவரிக்கும், குடிநீர் மற்றும் மாநகராட்சிப் பிரச்சனைகளுக்கு mawssec@tn.gov.in என்ற முகவரிக்கும் அனுப்பலாம். ரேஷன் கடை முறைகேடுகள் மற்றும் புகார்களுக்கு coopsec@tn.gov.in என்ற இமெயில் முகவரியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
நிலம் மற்றும் உள்ளாட்சித் துறை:
பட்டா மாறுதல் மற்றும் தாசில்தார் அலுவலகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு revsec@tn.gov.in என்ற முகவரியிலும், பஞ்சாயத்து மற்றும் கிராமப்புறப் பிரச்சனைகளுக்கு ruralsec@tn.gov.in என்ற முகவரியிலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.
கல்வி மற்றும் மருத்துவம்:
பள்ளிக்கூடம் சம்பந்தமான புகார்களுக்கு schsec@tn.gov.in முகவரியையும், கல்லூரி மற்றும் உயர்கல்வி சம்பந்தமாக hrsec@tn.gov.in முகவரியையும் தொடர்பு கொள்ளலாம். அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவம் சார்ந்த புகார்களுக்கு hfsec@tn.gov.in என்ற முகவரி ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, சாலை மற்றும் இதர துறைகள்:
அரசு பேருந்து மற்றும் ஆர்டிஓ அலுவலகப் புகார்களுக்கு transec@tn.gov.in என்ற முகவரியையும், மோசமான சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை பாலம் தொடர்பானவற்றிற்கு pwdsec@tn.gov.in என்ற முகவரியையும் பயன்படுத்தலாம்.

விவசாயம், சமூக நலம் மற்றும் சுற்றுச்சூழல்:
விவசாயம் சார்ந்த குறைகளுக்கு agrisec@tn.gov.in முகவரியும், முதியோர் உதவித்தொகை மற்றும் சமூக நலம் தொடர்பாக swsec@tn.gov.in முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளன. காடு மற்றும் மரம் வெட்டுதல் போன்ற சுற்றுச்சூழல் புகார்களுக்கு forsec@tn.gov.in என்ற முகவரியிலும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு labsec@tn.gov.in என்ற முகவரியிலும் மக்கள் தங்களது புகார்களை அனுப்பலாம்.
அமைச்சர்கள் மக்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என முதல்வர் விஜய் அண்மையில் கறாரான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த இமெயில் முகவரிகளுக்கு அனுப்பினால் மிக விரைவில் உரிய தீர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த முக்கியத் தகவலை மக்கள் அனைவரும் தங்களது மொபைலில் உடனே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
