அகிலன் மரணத்துக்கு நீதி வேண்டும்.. துணையாக திமுக நிற்கும்" - களமிறங்கிய ராஜீவ்காந்தி!

 
மாணவர் அகிலன் ராஜீவ்காந்தி

கோவை தனியார் பள்ளியில் சாதி ரீதியான கொடுமையால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 11-ஆம் வகுப்பு மாணவர் அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி நேரில் களமிறங்கியுள்ளார்.

கோவை தனியார் பள்ளியில் பயின்று வந்த அகிலன் என்ற மாணவர், சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அகிலனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்ற திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணவர் அகிலனின் குடும்பத்திற்கு திமுக என்றும் துணையாக நிற்கும். சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றம்சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.