பழனி கோயில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனைக் கொடைக்கானலில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பழனி அடிவாரம் பழநி ஆண்டவன் பூங்கா சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் (பக்தர்கள் வாகன நிறுத்தமாகப் பயன்படுத்திய இடம்) தனிநபர்களால் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு ஜூலை 6-ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய நில மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த முறைகேடு தொடர்பாகச் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜஸ்டின் மணிகண்டன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனைக் கொடைக்கானலில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நில மோசடி வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கைதான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 5-வது நபர் ஆவார்.
