கபடி வீராங்கனை பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்... "பயிற்சியாளர் ராஜு ரொம்ப நல்லவர்..” - கண்ணீருடன் மறுத்த மற்றொரு வீராங்கனை!

 
கபடி ராஜு பாலியல்

சென்னை கண்ணகி நகரில் 17 வயது இளம் கபடி வீராங்கனை ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், பயிற்சியாளர் ராஜு மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த வழக்கில்  புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் மற்றொரு கபடி வீராங்கனை, "பயிற்சியாளர் ராஜு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய்" எனத் தற்பொழுது பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாற்று வீராங்கனை, போக்சோ புகார் அளித்த சக வீராங்கனையின் பின்னணி குறித்துக் கண்ணீருடன் பல்வேறு அதிர்ச்சி விபரங்களை வெளியிட்டார். "எங்களது கபடி பயிற்சியாளர் ராஜு மாஸ்டர் மிகவும் நல்லவர்; எங்களை அவரது சொந்தப் பிள்ளைகளைப் போலத்தான் இத்தனை காலம் பாதுகாப்பாகப் பார்த்துக்கொண்டார். தற்பொழுது அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமைப் புகார் முற்றிலும் பொய்யானது மற்றும் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது. எங்கள் கபடி அணியின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமலும், பணத்தாசையாலும், அந்த வீராங்கனை தனது தாயுடன் சேர்ந்து இந்த விபரீதப் போலிப் புகாரை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்."

பாலியல்

போலிப் புகாரால் ஒரு நேர்மையான பயிற்சியாளரின் வாழ்க்கையும், தங்களின் விளையாட்டு எதிர்காலமும் சிதைந்துவிடக் கூடாது என அவர் மேலும் ஆதங்கப்பட்டார். "எதிர்காலத்தை மிரட்டி நாசமாக்கி விடுவேன் என மாஸ்டர் கூறியதாகச் சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை. விளையாட்டுத் துறையில் நேர்மையாக முன்னேறத் துடிக்கும் எங்களைப் போன்ற பெண்களுக்கு இந்த வதந்திகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.

எனவே, கண்ணகி நகர் அனைத்து மகளிர் போலீசார் இந்த வழக்கை அவசரப்பட்டு முடிக்காமல், அந்தப் பெண்ணின் குடும்பப் பின்னணி மற்றும் மொபைல் போன் உரையாடல்களை முறையாக விசாரித்து, உண்மையான குற்றவாளி யார் என்பதைச் சட்டத்தின் முன் வெளிக்கொண்டு வர வேண்டும்," என அவர் கண்ணீருடன் வலியுறுத்தினார்.