நடுக்கடலில் 6 நாட்களாக தத்தளித்த 3 மீனவர்கள் பத்திரமாக மீட்பு!

 
nadukkadal nadukkadal

கடலூர் பரங்கிப்பேட்டை சண்முகாநகரை சேர்ந்த மனோகர், ரமேஷ் மற்றும் புதுச்சேரி நாகவேல் ஆகிய 3 மீனவர்கள் கடந்த 2-ம் தேதி புதுப்பேட்டையை சேர்ந்த வீரவேல் என்பவரது பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் இரவு வெகுநேரமாகியும் கரை திரும்பாததால், கடலோர காவல் படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ஆம்புலன்ஸ்

மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் இரண்டு நாட்களாக வான்வழியாகவும் கடல்வழியாகவும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், தாழங்குடாவில் இருந்து சுமார் 17 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட 3 மீனவர்களும் உடனடியாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் 6 நாட்களாக உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த தங்களது உறவினர்கள் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மீனவ கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.