கடையநல்லூரில் சோகம்: பெற்றோர் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி!

 
லாரி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெற்றோர் மற்றும் மற்றொரு குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

பைக்

மருத்துவமனைக்குச் சென்றபோது விபத்து

வாசுதேவநல்லூர் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார். இவரது 3 வயது மகன் அத்விக்.

சம்பவத்தன்று காலை சுமார் 11 மணியளவில், பாலசுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குப் புறப்பட்டார். மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் சிக்னல் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

அப்போது சாலையின் மறுபுறம் விழுந்த அத்விக், தென்காசி நோக்கிச் சென்ற லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்முன்னே மகனை இழந்த பெற்றோர் கதறி அழுதனர். பாலசுப்பிரமணியன், அவரது மனைவி மற்றும் மற்றொரு குழந்தை லேசான காயங்களுடன் தப்பினர்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்த தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூர் பகுதியில் அதே நாளில் மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகள் நிகழ்ந்ததாகவும், அவற்றில் சிக்கியவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.