காஜல் அகர்வால் கேரவனுக்குள் புகுந்து சட்டையைக் கழற்றிய நபர்... அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!

 
காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பான் இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்துப் பேசினார்:

"ஷூட்டிங் இடைவேளையில் நான் என் கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஒருவர், கதவைக் கூட தட்டாமல் திடீரென கேரவனுக்குள் நுழைந்தார். நான் தனியாக இருப்பதைப் பார்த்து அவர் தவறாக நடக்கத் தொடங்கினார்" எனக் காஜல் தெரிவித்துள்ளார். அந்த நபர் அத்துடன் நிற்காமல், காஜல் முன்பே தனது சட்டையைக் கழற்றித் தனது மார்பில் குத்தியிருந்த டாட்டூவைக் காட்டியுள்ளார். அந்த டாட்டூ காஜல் அகர்வாலின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் தாம் பயத்தில் உறைந்து போனதாகக் காஜல் குறிப்பிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்

"அவருடைய இந்தச் செயலால் நான் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்ன செய்வதென்று தெரியாமல் என் கை, கால்கள் நடுங்கத் தொடங்கின. ரசிகர் என்ற பெயரில் ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது அனுமதியின்றி இப்படி நடந்து கொள்வது கிரிமினல் செயல்" என்று அவர் பதற்றத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இருப்பினும், அந்த நபரிடம் மென்மையாக எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும், சினிமா நட்சத்திரங்களுக்கும் 'பிரைவசி'  மற்றும் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய கசப்பான அனுபவங்களைக் கடந்தும், காஜல் அகர்வாலின் திரைப் பயணம் ஏறுமுகத்தில் உள்ளது.

காஜல் அகர்வால்

'பகவந்த் கேசரி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலிவுட் படமான 'ராமாயணா' படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் 'ராக்கிங் ஸ்டார்' யாஷூக்கு ஜோடியாக காஜல் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.