நடுவானில் திடீர் தொழில்நுட்ப கோளாறு! விவசாய நிலத்தில் அவசரமாக தரையிறங்கிய பயிற்சி விமானம்

 
பெங்களூரு

 

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட பயிற்சி விமானம், விவசாய நிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயிற்சி விமானி இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.கலபுரகி விமான நிலைய பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 2 இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தை தொடர்ந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.நிலைமையை உடனடியாக உணர்ந்த விமானி மற்றும் பயிற்சி விமானி, விமானத்தை விமான நிலையத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல முடியாத சூழலில் பாதுகாப்பான இடத்தில் தரையிறக்க முடிவு செய்தனர்.

Training aircraft makes emergency landing in Karnataka's Belagavi following technical glitch - India Today

இதையடுத்து கலபுரகி அருகே உள்ள பாலா கிராமப் பகுதியில் விவசாய நிலத்தை அடையாளம் கண்டு, விமானத்தை அங்கு பத்திரமாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்த இருவரும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கிய தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.விமானம் விவசாய நிலத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.