சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக 'கல்கி 2898 ஏ.டி' படத்துக்கு தேசிய விருது!
மத்திய அரசு வெளியிட்டுள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் வியப்பில் ஆழ்த்திய 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம், "மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்" என்ற உயரிய தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், மகாபாரதக் காலத்தையும் எதிர்கால அறிவியல் புனைகதையையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு நவீனக் காவியமாகும். சர்வதேசத் தரத்திலான விஎஃப்எக்ஸ் காட்சிகள், புதுமையான உலக வடிவமைப்பு மற்றும் மிரட்டலான பின்னணி இசை ஆகியவை இந்தியத் திரையுலகிற்கு ஒரு புதிய காட்சி அனுபவத்தை வழங்கியிருந்தன.
உலகளவில் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து, பாக்ஸ் ஆபீஸில் பல நூறு கோடிகளைக் குவித்து இத்திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ், பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து, அஸ்வத்தாமாவாகப் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களைச் சமரசமின்றித் தந்ததற்காகக் கிடைத்துள்ள இந்தத் தேசிய விருது அங்கீகாரம், 'கல்கி 2898 ஏ.டி' படக்குழுவினருக்குக் கிடைத்துள்ள மாபெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.
