கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்... மதுரையில் பரபரப்பு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கச்சிராயன்பட்டி புதூர் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால் தங்களின் வாழ்வாதாரமும், உடல் ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, குவாரியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களைச் சாலையோரங்களிலேயே கொட்டி வைப்பதால் தங்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கச்சிராயன்பட்டி புதூர் பகுதி பொதுமக்கள் இன்று காலை திடீரென ஒன்று திரண்டனர். தங்களின் வாழ்விடத்தைப் பாதிக்கும் அந்த கல்குவாரியை உடனடியாக நிரந்தரமாக மூடக்கோரி அவர்கள் அங்குள்ள முக்கியச் சாலையில் அமர்ந்து அதிரடியாகச் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த சமாதான உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்
