சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி: திமுகவின் கோட்டையைத் தகர்க்க அதிமுக கூட்டணி முயற்சி?

 
சங்கராபுரம் சங்கராபுரம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான சங்கராபுரத்தில் 1962 முதல் 2021 வரை மொத்தம் 14 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தொகுதியின் தேர்தல் வரலாற்றில் திமுக 7 முறை வெற்றி பெற்றுத் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக ஒரு முறையும் இங்கு வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவின் மூத்த நிர்வாகியும், இப்பகுதியில் செல்வாக்கு மிக்கவருமான டி. உதயசூரியன் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளர் டி. உதயசூரியன் 1,21,186 வாக்குகளைப் பெற்று, பாமக வேட்பாளர் டாக்டர் ஜி. ராஜாவை விட 45,963 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். 1996, 2016 மற்றும் 2021 என மூன்று முறை இந்தத் தொகுதியிலிருந்து உதயசூரியன் சட்டசபைக்குத் தேர்வாவதே அவரது மக்கள் செல்வாக்கிற்குச் சான்றாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு இந்தத் தொகுதி திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அதே சமயம், அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முறை திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடப் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக, தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் விவசாயத் தேவைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருவதால், சங்கராபுரம் தொகுதியில் இம்முறை யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.