கள்ளக்குறிச்சி விவகாரம்: “3 மாதங்களுக்கு முன்பே நடந்த சம்பவம் - மன உளைச்சலில் ஆட்சியர்!” உண்மையைப் போட்டுடைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா ராமு!

 
கள்ளக்குறிச்சி கவிதா ராமு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் தொடர்பான ஆபாச குறுஞ்செய்தி சர்ச்சையில், அந்தத் தவறான செயல் மூன்று மாதங்களுக்கு முன்பே நிகழ்ந்ததாக ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா ராமு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியரும் அவரது கணவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், இருப்பினும் பணியிட மாற்றம் பெற்றுச் செல்ல மறுத்து அவர் துணிச்சலுடன் பணியாற்றி வருவதாகவும் கவிதா ராமு தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலிலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா ராமு, சம்பந்தப்பட்ட அந்தத் தவறான நிகழ்வு மூன்று மாதங்களுக்கு முன்பே நடந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பத்மஜா கள்ளக்குறிச்சி

இந்த துரதிருஷ்டவசமான நிகழ்வால் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரும், அவரது கணவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கவிதா ராமு குறிப்பிட்டுள்ளார். இக்கட்டான அந்தச் சூழலில் அந்தப் பெண் அதிகாரிக்கு மனரீதியான ஆதரவும் ஆறுதலும் மிகவும் தேவைப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடந்த 11-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரைத் தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த விதத்தில் ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையிலிருந்தும், அதனால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்தும் விடுபடுவதற்காக வேறு மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் பெற்றுச் செல்லுமாறு சில சக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், அத்தகைய அறிவுரைகளை ஏற்க மறுத்த அந்தப் பெண் ஆட்சியர், எதற்கும் அஞ்சாமல் அதே மாவட்டத்தில் தனது நிர்வாகப் பணியில் உறுதியாக நின்றதாகக் கவிதா ராமு பாராட்டுத் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்களுக்காகப் பாதிக்கப்பட்டவர் பின்வாங்காமல் நேர்மையுடன் பணியாற்றிய விதம் அதிகாரிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் நோட்டீஸைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஷக்னாஸ், மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக எழுத்துப்பூர்வப் புகாரைப் பெற்றுள்ளார். அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா ராமு வெளியிட்டுள்ள இந்தப் பதிவு வழக்கின் பின்னணியை மேலும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.