தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார் - 494 மண்டகப்படிகளில் அருள்பாலிப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
கள்ளழகர் தங்கபல்லக்கு கள்ளழகர் தங்கபல்லக்கு

மதுரையின் அடையாளமான உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளும் வைபவம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி, அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுகிறார்.

ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.00 மணி முதல் 6.15 மணிக்குள், தங்கப்பல்லக்கில் அமர்ந்து கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்குப் பயணத்தைத் தொடங்குகிறார். அழகர் வரும் வழியில் மொத்தம் 494 மண்டகப்படிகளில் தங்கி, பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார். இதற்காக மதுரை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கள்ளழகர்

ஏப்ரல் 30-ஆம் தேதி அதிகாலையில், மதுரை எல்லையான மூன்று மாவடியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை வரவேற்கும் 'எதிர்சேவை' நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் இறங்குதல் மே 1-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள், தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார்.

இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்!

சித்திரைத் திருவிழாவின் இந்த உன்னத தருணத்தைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷம் மதுரையை இப்போதே அதிர வைக்கத் தொடங்கிவிட்டது.