காளியம்மாளுக்கு கல்தா... அதிமுக லிஸ்ட்ல பெயர் இல்லை.. சென்னை தொகுதிகளில் தொடரும் 'சஸ்பென்ஸ்'!

 
காளியம்மாள் காளியம்மாள்

அதிமுக இதுவரை 148 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காளியம்மாளுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இஸ்லாமிய வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள், மயிலாடுதுறை அல்லது பூம்புகார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரியிருந்தார். இன்று வெளியான 127 பேர் கொண்ட பட்டியலில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் காளியம்மாளுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

காளியம்மாள்

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 148 வேட்பாளர்களில் மொத்தம் 17 பெண்களுக்கு அதிமுக வாய்ப்பளித்துள்ளது. இரண்டாம் கட்டப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா போன்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், லீமா ரோஸ் போன்ற புதிய முகங்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 3 இடங்களைக் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையின் எஞ்சிய 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் அதிமுக தலைமை இன்னும் ரகசியம் காத்து வருகிறது. இந்தப் பட்டியலில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காளியம்மாள்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்குக் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சையது சுல்தான் மட்டுமே ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளர் ஆவார்.