“அரசியல் நாகரிகத்தின் கலங்கரை விளக்கம்” - நல்லகண்ணு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

 
நல்லகண்ணு கமல் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தியில், "தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்" என்று நல்லகண்ணு அவர்களின் தியாகத்தை அவர் போற்றியுள்ளார்.


ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காக சுமார் 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்ற ஒரு மாபெரும் போராளியாக அவரை அடையாளம் காட்டியுள்ளார். நேர்மை, தூய்மை, எளிமை மற்றும் அரசியல் நாகரீகம் ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த "கலங்கரை விளக்கமாக" நல்லகண்ணு அவர்கள் திகழ்ந்ததை கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்" என்று கூறி, நல்லகண்ணு அவர்கள் விட்டுச் சென்ற அறப்பணிகளைத் தொடர வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நல்லகண்ணு

நல்லகண்ணு அவர்களின் மறைவுக்குத் தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் ஆளுமைகளும் திரையுலகினரும் ஒருமித்த குரலில் அஞ்சலி செலுத்தி வருவது, அவர் எத்தகைய மதிப்பிற்குரிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார் என்பதற்குச் சான்றாக உள்ளது.