சௌமியா அன்புமணியின் பேரவை செயல்பாட்டிற்கு கமல்ஹாசன் பாராட்டு!

 
செளமியா

சட்டப்பேரவையில் மதுவிலக்கு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்துத் தரவுகளுடன் ஆக்கப்பூர்வமாகப் பேசிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியின் செயல்பாடுகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய சௌமியா அன்புமணி, டாஸ்மாக் மதுபான விற்பனை குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதிப்பதாகத் தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளில் மது விற்பனை நடைபெறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுவிலக்கை அரசு குறைந்தபட்சக் கொள்கையாகவாவது அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

செளமியா

அவையில் உறுப்பினர்கள் எவ்வாறு நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குச் சௌமியா அன்புமணி ஒரு முன்னுதாரணம் என்றும், அவர் சட்டப்பேரவையில் மிகவும் ஆக்கப்பூர்வமாகப் பேசுவதாகவும் பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

துணை சபாநாயகர் அவரைப் பாராட்டிய வீடியோவைப் பகிர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சௌமியா அன்புமணிக்குத் தனது "Excellent" பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சௌமியா அன்புமணி, குறுகிய காலத்திற்குள் பல்வேறு மக்கள் பிரச்சனைகளைத் தரவுகளுடன் அழுத்தமாக முன்வைத்து வருவது அரசியல் களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.