கமலஹாசனின் ஆஸ்தான இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சென்னையில் காலமானார் - 'ராஜபார்வை', 'அபூர்வ சகோதரர்கள்', 'பேசும் படம்’ என க்ளாசிக்கல் ஹிட் கொடுத்தவர்!
பல்வேறு மொழிகளில் காலத்தால் அழியாத பல வெற்றிப் படங்களைத் தந்து இந்தியத் திரையுலகில் முத்திரை பதித்த பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (95), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று காலமானார்.
ஆந்திராவில் பிறந்த இவர், புகழ்பெற்ற இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் இணை இயக்குநராகத் தன் பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டிருந்தார்.

1972-ல் தெலுங்கில் அறிமுகமான இவர், தமிழில் இயக்கிய முதல் படமான 'திக்கற்ற பார்வதி' படத்திற்கே தேசிய விருதைப் பெற்றார். உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து 'ராஜபார்வை', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' உள்ளிட்ட பல கல்ட் கிளாசிக் மற்றும் சாதனைப் படங்களைத் தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார்.

திரைத்துறையில் பல புதுமைகளைப் புகுத்திய இவரது மறைவு, தமிழ் சினிமா மற்றும் இந்தியத் திரையுலகிற்குப் பெரும் இழப்பாகும். இவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
