நடிகர் கமலைத் தொடர்ந்து ரஜினியாலும் லைக்காவுக்கு பெரும் நஷ்டம்... அடுத்தடுத்து பெரிய அடி!
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், பெரிய பட்ஜெட் படங்களுக்கு பேர் போனதாக இருந்து வருகிறது. பெரிய நடிகர்களின் முதல் சாய்ஸ் லைக்கா நிறுவனமாக இருந்து வருகிறது. செலவைப் பற்றி கவலையில்லை... நினைத்ததை எடுக்கலாம்.. பட ரிலீஸுக்கு பப்ளிசிட்டி செய்வதிலும் சமர்த்தர்கள் என்று இயக்குநர்கள், நடிகர்களின் குட் புக்கில் லைக்காவுக்கு இப்போதும் தனி இடம் உண்டு.
நடிகர் விஜய் நடிப்பில் கத்தி படத்தின் படப்பிடிப்புடன் லைக்கா நிறுவனம் படத்தயாரிப்பில் களமிறங்கியது. அதன் பின்னர் தமிழில் பல பிளாக்பஸ்டர்களை உருவாக்கியது. இருப்பினும், புரொடக்ஷன் ஹவுஸ் வடிவமைத்த பெரும்பாலான பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதில் ஆச்சரியம் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற ஸ்டார் நட்சத்திரங்களின் படங்கள் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையான் திரைப்படம் லைகா புரொடக்ஷனை பாதித்த சமீபத்திய படம். ஞானவேல் இயக்கத்தில், ரஜினியின் முந்தைய படங்களின் நஷ்டத்தை லைகா மூலம் மறைக்க நினைத்த படமான வேட்டையன் இன்னொரு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு ரஜினி, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தயாரித்த லைக்கா, அதிலும் பலகோடி நஷ்டத்தை சந்தித்த பிறகு, லைக்கா நிறுவனத்திற்கு குறைந்த சம்பளத்துடன் மற்றொரு படத்தில் நடித்து தருவதாக ரஜினி உறுதியளித்திருந்தார் என்று தகவல்கள் வெளியானது. எனினும், ரஜினியின் தர்பார் மற்றும் 2.O போன்ற படங்களும் லைக்கா நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள் திரைத்துறையினர்.

அதற்கு சற்று முன், லைகா தயாரிப்பில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி, மீண்டும் தோல்வியடைந்தது. இந்தியன் 2 திரைப்படம் மோசமாக தோல்வியடைந்ததன் விளைவாக இந்தியன் 3 படத்தைச் சுற்றி மேகமூட்டம் ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தியன் 3 படத்தை 80 சதவிகிதம் எடுத்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இந்தியன் 2 படத்தின் மோசமான தோல்வி, இந்தியன் 3 படத்தின் வர்த்தகத்தை கேள்விக்குறியாக்கி, அது மற்றொரு நஷ்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் லைகா நிறுவனத்திற்கு பெரும் கோடிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
