செப்.22 முதல் 6–8ம் வகுப்புக்கு காலை உணவு திட்டம் ... முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு!
Sep 16, 2026, 16:13 IST
தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செப்.17-க்கு பதிலாக தற்போது செப்.22-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதுவரை தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம் தற்போது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த விரிவாக்கத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். மாநில அளவில் கூடுதலாக 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா செப்.17-ம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்ததால் விழா தேதி மாற்றப்பட்டது.தற்போது செப்.22-ம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார் என சமூக நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மாவட்டங்களில் தொடங்கப்படாது?
செப்.22 முதல் மாநிலம் முழுவதும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அங்கு தொடக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவடைவதால், மேலும் பல லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
