இந்தியாவின் 2வது முக்கிய துறைமுகமாக உருவெடுத்தது காமராஜர் துறைமுகம் - ₹440 கோடி 'கேபிடல் டிரெட்ஜிங்' பணிகள் நிறைவு!

 
காமராஜ் துறைமுகம்

சென்னைக்கு அருகே உள்ள சென்னை காமராஜர் துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்திய 'கேபிடல் டிரெட்ஜிங்' திட்டத்தின் ஆறாம் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் 18 மீட்டர் செயல்பாட்டு ஆழம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது முக்கியத் துறைமுகமாக இது புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.

துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிக்கும் இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காகச் சுமார் ₹440 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன மேம்பாட்டுப் பணிகளின் மூலம், கடலில் இருந்து பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வழித்தடங்களின் ஆழம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 18 மீட்டர் செயல்பாட்டு ஆழம் எட்டப்பட்டுள்ளதால், உலக அளவில் உள்ள மிகப்பெரிய சரக்குக் கப்பல்களும் இனி எவ்விதத் தடையுமின்றி காமராஜர் துறைமுகத்திற்குள் நேரடியாக வந்து செல்ல முடியும். இந்த உள்கட்டமைப்பு வசதி, இத்துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறனை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியுள்ளது.

ஜேசிபி கடல் துறைமுகம் கட்டுமானம் பாலம்

1,70,000 'டெட்வெயிட் டன்னேஜ்' வரையிலான அதிபரிமாண சரக்குகளை ஏற்றிச் செல்லும், முழுமையாக நிரப்பப்பட்ட மாபெரும் 'கேப்சைஸ்' ரகக் கப்பல்களை இனி இத்துறைமுகம் மிக எளிதாகக் கையாளும்.

நிலக்கரி, இரும்புத் தாது மற்றும் பிற முக்கியத் தொழில் துறை சார்ந்த மூலப்பொருட்களைக் குறைந்த செலவிலும், ஒரே நேரத்தில் அதிக அளவிலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இது வழிவகுக்கும்.

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் காமராஜர் துறைமுகம் மேற்கொண்டுள்ள இந்த உள்கட்டமைப்புச் சீர்திருத்தம், தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி மற்றும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.