காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பரபரப்பு - ஸ்தோத்திர பாடல் பாடுவதில் இரு தரப்பு மோதல்... போலீசார் குவிப்பு!
உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், திருஅவதார உற்சவ கொண்டாட்டங்களின் போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் ஒருமுறை மோதல் வெடித்துள்ளது. கோவிலில் நடைபெற்று வரும் திருஅவதார உற்சவத்தை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 29) கருவறை மண்டபத்தில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அப்போது:
கருவறை மண்டபத்தில் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடுவதில் தாதாச்சாரியார் (வடகலை) பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. தாதாச்சாரியார் பிரிவினர் ஸ்தோத்திரப் பாடல்களைத் தொடங்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கலை பிரிவினர் திடீரென கோஷங்களை எழுப்பினர். இதனால் அமைதியாக நடைபெற வேண்டிய வழிபாட்டுத் தளத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

கோவிலுக்குள் இரு பிரிவினரிடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் நகரப் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்திச் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திருவிழா காலங்களில் இதுபோன்ற மோதல்கள் தொடர்வதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கோவில் வளாகம் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவதில் யாருக்கு முன்னுரிமை என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே நீண்ட காலமாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற உத்தரவுகளையும் தாண்டி, அவ்வப்போது இதுபோன்ற நேரடி மோதல்கள் நடைபெறுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
