விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி!
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை, திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கயம் ஏ.சி. நகரில் வசிக்கும் எஸ்தர் என்பவரின் மகள் கனித்ரா (2½). கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) மாலை குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுமார் 8 முதல் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் குழந்தையைக் காணவில்லை என்பதை அறிந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். பின்னர் திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி குழந்தையை மீட்டனர். உடனடியாக காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
