“ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய்” - கனிமொழி பதிலடி!
“திமுக இப்போது தீய சக்தி மட்டுமல்ல, மக்களை விட்டுத் தூரமாகப் போன தூர சக்தி” என்று தமிழக முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், “ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவையே விஜய் குறை சொல்லி வருகிறார்” என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பதில் அளித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் விஜய் திமுகவை கடுமையாகச் சாடினார். அவர் பேசுகையில், “தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் சேர்ந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பேரம் பேசி ஆட்சி அமைக்கத் திட்டம் போட்டார்கள். திமுக இப்போது தீய சக்தி மட்டுமல்ல... மக்களை விட்டு ரொம்ப தள்ளிப் போன தூர சக்தி, பார சக்தி, ஓர சக்தி. இப்போதும் சொல்கிறேன், இங்க ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டி. ஒண்ணு திமுக, இன்னொண்ணு தவெக. மற்றவர்களுக்கு இங்கு வேலையில்லை. அதை மீறி யாராவது இடையில் வந்தால் ரிசல்ட் என்னவென்று தெரியும்.

நீங்கள் தற்குறி என்றவர்கள்தான் உங்களை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார்கள். 100 யூனிட் இலவச மின்சாரம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை, ஜெயலலிதா ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. நிதி தொடர்பான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, எல்லாத்தையும் நீங்களே செய்துவிட்டுப் பழியை என் மீது போடுகிறீர்கள். என் மீது எத்தனை பழி போட்டாலும் மக்களுக்கானதை நான் செய்து முடிப்பேன்” என்றார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., விஜய்யின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த பிறகும் கூட, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து திமுகவையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். மாநிலத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி அவரிடமே கேளுங்கள்” என்று விமர்சித்துள்ளார்.
தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் அரசியல் வார்த்தைப்போர் முற்றி வரும் நிலையில், கனிமொழியின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பைக் கூட்டியுள்ளது.
