"யாகாவா ராயினும் நாகாக்க" - ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சுக்கு கனிமொழி எம்பி கண்டனம்!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பயன்படுத்திய சர்ச்சைக்குரிய மற்றும் கடுமையான வார்த்தைகளுக்கு அக்கட்சியின் எம்பி கனிமொழி பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்துச் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ஆ.ராசா, அரசியல் விமர்சகர் ஒருவரைக் கடுமையாகச் சாடியதுடன் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். இவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற புகழ்பெற்ற திருக்குறளை மட்டும் பதிவிட்டுள்ளார்.
எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும் தான் பேசும் சொற்களைக் காத்துக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் சொல்லிய குற்றத்திற்காகத் துன்பப்பட நேரிடும் என்ற குறளின் மூலம், கட்சி நிர்வாகிகளின் பேச்சுக் குறித்து மறைமுகமாகவும் தெளிவாகவும் கனிமொழி தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
