மாநில அரசியலுக்குத் திரும்பும் கனிமொழி - திருச்செந்தூர் தொகுதியில் போட்டி?!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி குறித்த அதிரடியான அரசியல் நகர்வுகள் வெளியாகியுள்ளன.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அவர் தேசிய அரசியலில் இருந்து விடைபெற்று மாநில அரசியலில் முக்கியப் பங்காற்ற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்செந்தூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனத் தலைமைக்குத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அவர், இந்தத் தொகுதியை கனிமொழிக்காக விட்டுக் கொடுக்கச் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டங்களில் திமுகவின் பிடியை மேலும் வலுப்படுத்தவும், அங்குள்ள கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும் கனிமொழியின் வருகை உதவும் எனத் திமுக தலைமை கணக்கு போடுகிறது.
சமீபத்தில் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, "சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?" என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. "இது குறித்து இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை" என்று மட்டும் கூறிச் சென்றது, அவர் திருச்செந்தூரில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தும் விதமாகவே பார்க்கப்படுகிறது.

கனிமொழி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அவருக்கு மாநில அமைச்சரவையில் மிக முக்கியமான துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் சூழல் ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளராகவும், டெல்லி அரசியலில் திமுகவின் முகமாகவும் விளங்கிய கனிமொழி, தமிழக அரசியலில் நேரடியாகக் களம் இறங்குவது வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
