தவெக ஆட்சியில் தினமும் பெருகும் குற்றங்கள்... கனிமொழி கடும் கண்டனம்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் சீர்கெட்டு வருவதாகத் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் கவலை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பகுதியில் 9 வயது சிறுவன் 17 வயது பள்ளி மாணவனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் வடுக்கள் மறைவதற்குள் நாகர்கோவிலில் இரு கூலித் தொழிலாளர்கள் மதுபோதை கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட செய்தியும் காரைக்குடியில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும் அடுத்தடுத்து வெளிவந்துள்ளன.

மாநிலத்தில் தினமும் பெருகி வரும் இத்தகைய கொடூரமான குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் வேதனையை அளிப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சட்டம் ஒழுங்கு முழுமையாகத் தன் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியின்றித் தவித்து வருகின்றனர். மறுபுறம் முறையான நல்வழிப்படுத்துதல் இல்லாத காரணத்தால் இளம் தலைமுறையினர் பலர் மிக எளிதாகக் குற்றவாளிகளாக மாறி வருவதை எதிர்கொள்ள முடியாமல் இந்தச் சமூகமே திணறி வருகிறது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சீர்திருத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பொறுப்பு ஆளும் அரசிற்கு அதிகம் உள்ளது. ஆனால் இத்தகைய சமூகக் கடமைகளை முதன்மையாக ஏற்றுச் செயல்படத் தவெக அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் இந்த அலட்சியப் போக்கே மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் மேலும் தீவிரமடைந்து வருவதற்கு முதன்மைக் காரணம் என்றும் கனிமொழி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
