இரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்... மடக்கி பிடித்த போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்த மர்ம கும்பல்!

 
சேலம் சேலம்

வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியாகக் கேரளா செல்லும் இரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா நோக்கிச் சேலம் வழியாக நேற்று காலை தன்பாத் முதல் ஆலப்புழா வரை செல்லும் விரைவு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

கஞ்சா கடத்தல்

வழக்கமாக இந்த இரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சேலம் இரயில் நிலையத்தில் அந்த இரயில் வந்ததும் பெட்டிகளில் ஏறி சோதனையிட்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைகளை எடுத்துப் பார்த்தபோது அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சா

காவல்துறையினர் சோதனையிடுவதைக் கண்டதும் கஞ்சாவைக் கடத்தி வந்த மர்ம நபர்கள் அதனை அங்கேயே வீசிவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த 20 கிலோ கஞ்சாவை இரயில்வே காவல்துறையினர் முழுமையாகப் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை இரயிலில் வீசிவிட்டு தப்பி ஓடிய அந்த மர்மக் கும்பலைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகக் காவல்துறையினர் தற்போது வலைவீசித் தேடி வருகின்றனர்.