கன்னட அமைப்புகள் போராட்டம் - கர்நாடகா செல்லும் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்!

 
கன்னட அமைப்பு ஓசூர் போராட்டம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நீண்ட நாட்களாகக் கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. கர்நாடக அரசு அணையைக் கட்டத் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்குத் தொடர்ந்து தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அணை கட்டும் விவகாரத்தை எதிர்த்துத் தமிழக விவசாயிகளும் பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மேகதாது அணை திட்டத்திற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்புகள் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. கன்னட ஒக்கூடா கூட்டமைப்பின் தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில், இரு மாநில எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேகதாது கர்நாடக மந்திரி ரெட்டி

எல்லைப் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு வருவதால், அங்கு சட்டம்-ஒழுங்கு பாதிப்போ அல்லது தேவையற்ற பதற்றமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இரு மாநிலக் காவல் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் திடீர் பந்த் போராட்டம் காரணமாகப் பாதுகாப்புப் நோக்கில், ஓசூர் அருகே உள்ள இரு மாநில எல்லையான ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்துடனேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலை நிமித்தமாகவும், அவசரத் தேவைகளுக்காகவும் இரு மாநிலங்களுக்கும் இடையே தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், பேருந்துகள் இன்றி ஓசூரில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்து வருவதை அடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க இரு மாநில எல்லைப் பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் நூற்றுக்கணக்கான போலீசார் அதிரடியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையைக் கடந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாததால் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி மற்றும் ஓசூர் எல்லைப் பகுதிகள் தற்போது பெரும் பரபரப்புடன் காணப்படுகின்றன.