மனைவிக்கு புடவை வாங்கச் சென்றவர் மீது பாய்ந்த ஜீப்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், தீபாவளியை முன்னிட்டு மனைவிக்குப் புடவை வாங்க ஸ்கூட்டரில் சென்ற 55 வயது நபர், வேகமாக வந்த சொகுசு ஜீப் மோதி உயிரிழந்தார். ஜீப்பில் வந்தவர்கள் விபத்துக்குப் பிறகு மற்றொரு காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கான்பூரைச் சேர்ந்த சந்தோஷ் சிங் சவுகான், கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு மனைவிக்குப் புடவை வாங்குவதற்காக ஸ்கூட்டரில் வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது கல்யாண்பூர் பகுதியில் உள்ள ஆவாஸ் விகாஸ்-3 பகுதியில் வேகமாக வந்த மகிந்திரா தார் ஜீப், அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் சுற்றுச்சுவர்களை உடைத்துக்கொண்டு தோட்டத்திற்குள் புகுந்து நின்றது. ஜீப்பில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் ஜீப்பை ஓட்டியதாகவும், அவர் வாகனம் ஓட்டப் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்குப் பிறகு மூவரும் ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டு, அங்கு வந்த மற்றொரு காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
