காதல் தொல்லையால் இளம்பெண் உயிரிழப்பு; தொல்லை கொடுத்த இளைஞர் அடித்துக்கொலை... கன்னியாகுமரியில் பரபரப்பு!

 
குமரி

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தொடர் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான ஏஞ்சல் என்ற இளம்பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஆண்டனி என்பவரும் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒரே சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டனி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறி, கடந்த மே மாதம் ஏஞ்சலின் தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆண்டனி, சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் ஏஞ்சலுக்குத் தொல்லை கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏஞ்சல் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

ஏஞ்சலின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ஆண்டனியை கற்களால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் உயிரிழப்புகளுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.