ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்துப் பாலியல் அத்துமீறல் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியை குளிப்பதைப் ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் அத்துமீறல் மற்றும் பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பெண் குளிப்பதை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்துக் கொண்டு, ஜெயகாந்தன் மற்றும் அவரது நண்பரான ஜெகன் ஆகிய இருவரும் சேர்ந்து ஆசிரியையை மிரட்டியுள்ளனர்.

வீடியோவை வெளியிட்டு விடுவதாக அச்சுறுத்தி, ஆசிரியை மீது தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதுடன், அவரிடமிருந்து பணத்தையும் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஜெயகாந்தன் மற்றும் ஜெகன் ஆகிய இருவர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
