தண்ணீர் வாளியில் விழுந்து 1 வயது குழந்தை பரிதாப பலி!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சூழால் பகுதியில் வசித்து வருபவர் சுனில். தொழிலாளியான இவருக்கு ஆஷா என்ற மனைவியும், 1 வயதில் தர்வின் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். ஆஷா நேற்று வீட்டில் உள்ள சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தை தர்வின் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு துணி துவைப்பதற்காகப் பெரிய குவளை ஒன்றில் நிறையத் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக அந்தத் தண்ணீர்க் குவளையினுள் தலைகீழாக விழுந்துள்ளான். சமையல் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த தாய், குழந்தை தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட குழந்தை, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
