பயணிகளின் கனிவான கவனத்திற்கு... எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

 
ரயில்

 

திருச்சி: பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நாட்களில் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதன்படி, செப்டம்பர் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 29-ம் தேதியை தவிர, திருச்சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (76820) திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்-திருச்சி டெமு ரெயில் (76819), காரைக்காலுக்கு பதிலாக திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும்.

ரயில்

அதேபோல், பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (16844) செப்டம்பர் 24, 26 மற்றும் 29-ம் தேதிகளில் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாட்களில் ரெயில் திருச்சி செல்லாது. தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, புகளூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (56817) செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 29-ம் தேதியை தவிர, 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

திருச்சி-மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (16834) செப்டம்பர் 26 மற்றும் 29-ம் தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாகவும், ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (56106) செப்டம்பர் 29-ம் தேதி 50 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும். காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் (56832) அன்றைய தினம் 40 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.மேலும், செப்டம்பர் 24-ம் தேதி காலை 5.40 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாகவும், செப்டம்பர் 26-ம் தேதி ராமேசுவரம்-சென்னை ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (20498) 2 மணி நேரம் தாமதமாகவும் இயக்கப்படும்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்

திருச்சி-சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (22676) செப்டம்பர் 29-ம் தேதி 20 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.30 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) செப்டம்பர் 26, 28 மற்றும் 30-ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மேற்கண்ட நாட்களில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நேரம் மற்றும் புறப்படும் இடத்தை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.