ட்ரோன்களை இயக்கும் கிராமப்புறப் பெண்கள் - 'நமோ டிரோன் தீதி' திட்டத்தில் இந்தியாவிலேயே கர்நாடகா முதலிடம்!

 
ட்ரோன் ட்ரோன்

நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயப் பணிகளை எளிதாக்கவும், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மத்திய அரசு கொண்டு வந்த 'நமோ டிரோன் தீதி' திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண் சுய உதவிக் குழுக்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது வரை கர்நாடகா மாநிலத்தில் 145 பெண்கள் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்து டிரோன் விமானிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.

இந்தியா முழுவதும் இதுவரை 1,094 பெண்கள் இந்தப் பயிற்சியை முடித்துள்ளனர். இதில் கர்நாடகாவின் பங்கு மிக முக்கியமானது. இந்தத் திட்டத்தின் நோக்கம் விவசாயத்தில் நவீனத்தைப் புகுத்துவதே ஆகும்: டிரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களைத் தெளிப்பதன் மூலம் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. மனிதர்களால் தெளிப்பதை விட, டிரோன்கள் பயிர்களின் மீது சீராகவும் துல்லியமாகவும் மருந்துகளைத் தெளிக்கின்றன.

பூச்சிக்கொல்லி மருந்துகளை நேரடியாகக் கையாளுவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் விவசாயிகளுக்குக் குறைகிறது. மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் 15,000 விவசாய டிரோன்களை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. பயிற்சி பெற்ற ஒவ்வொரு 'டிரோன் தீதி'யும் தனது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்குக் கட்டண அடிப்படையில் டிரோன் சேவைகளை வழங்குவதன் மூலம் மாதம் கணிசமான வருமானம் ஈட்ட முடியும்.

கிராமப்புறப் பெண்கள் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறுவதுடன், விவசாயிகளின் தோழனாகவும் மாறி வருவது சமூக மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.