மிளகாய் தோட்டத்தில் நடிகைகளின் புகைப்படங்கள்! கண் திருஷ்டியைத் தவிர்க்க விவசாயியின் வித்தியாசமான ஐடியா!

 
ராஷ்மிகா

 

கர்நாடகாவில் மிளகாய் தோட்டத்தில் கண் திருஷ்டி படாமல் இருக்க, பிரபல நடிகைகளின் புகைப்படங்களைத் தொங்கவிட்ட விவசாயியின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக விவசாயத் தோட்டங்களில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதிக மகசூல் கிடைக்கும்போது கண் திருஷ்டி படாமல் இருக்க பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றுவது வழக்கம். இதற்காக சோளக்காட்டு பொம்மை, பழைய செருப்பு, கருப்பு மை பூசப்பட்ட பானை உள்ளிட்டவற்றைத் தோட்டங்களில் தொங்கவிடுவார்கள்.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முல்குண்ட் கிராமத்தைச் சேர்ந்த சிவானந்த் என்ற விவசாயி வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது மிளகாய் தோட்டத்தில் செடிகள் செழித்து வளர்ந்து, மிளகாய்கள் காய்த்துத் தொங்குவதால், கண் திருஷ்டியைத் தவிர்க்க நடிகைகளின் புகைப்படங்களைத் தொங்கவிட்டுள்ளார்.

ரச்சிதா ராம், ராஷ்மிகா மந்தனா புகைப்படங்கள்

பிரபல நடிகைகளான ரச்சிதா ராம், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் புகைப்படங்களை இரண்டு கம்புகளில் கட்டித் தொங்கவிட்டுள்ளார். அந்த வழியாகச் செல்வோரின் பார்வை மிளகாய் செடிகள் மீது விழாமல், நடிகைகளின் புகைப்படங்கள் மீது திரும்பும் என்பது அவரது நம்பிக்கை.

விவசாயியின் இந்த வித்தியாசமான யோசனை தற்போது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் கண் திருஷ்டி நம்பிக்கைக்கு, நடிகைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.