அரசு ஊழியர்களுக்கு டிச.1 முதல் மொபைல் செயலியில் வருகைப்பதிவு கட்டாயம் ... அதிரடி உத்தரவு!

 
கர்நாடகா

 

கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் செயலி மூலம் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் அரசு துறைகளில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வருகைப்பதிவைக் கண்காணிக்க 'கர்த்தவ்யா' (Kartavya) என்ற புதிய செயலியை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் இந்தச் செயலியை நவம்பர் 25-ம் தேதிக்குள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். டிசம்பர் 1 முதல் பணிக்கு வரும்போதும், பணியில் இருந்து வெளியேறும் போதும் செயலி வழியாக வருகைப்பதிவை மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் செயலி இருப்பிட அடிப்படையிலான கண்காணிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்துவிட்டு உரிய அனுமதியின்றி வெளியே சென்றால், அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும்.

உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் அலுவலகப் பணிக்காக வெளியே செல்வதற்கு தடை இல்லை. இந்தச் செயலி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.