தமிழகத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!
புதுடெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இன்று நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் 56-வது கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை என்பதாலும், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என்பதாலும் வினாடிக்கு 2,000 கன அடியாகத் குறைக்கக் கோரி கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.

இரு மாநிலங்களின் நீர் இருப்பு மற்றும் மழை விவரங்களை மதிப்பீடு செய்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
கூடுதல் நீர் திறக்கத் தமிழ்நாடு அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையையும் ஏற்றுக் கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 6,000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
